தோன்றி வந்ததன் உண்மை அறியின்
எளிதாம் எதிர்காலம் எதுவென அறிதல்
பண்பிலே மாண்பு கண்டார் முன்னோர்
பண்பிதுவென பகர்ந்தார் பின் வந்தோர்
பண்பறி வாழும் பக்குவம் இன்றெங்கே?
வாளொடு தோன்றிய புவன மூத்தகுடி
கையே ஆயுதமென்பது பரிணாமப் பிழையா
இயற்கையின் நிலைப்பு இருத்தலைக் காத்தல்
இன்று இயற்கைக்கே மூச்சுத் திணறல்
இயல்பிதுவென அறிந்து பிறப்பது எந்நாளோ?
தொன்மை பேசுவதே தமிழர்க்குச் சுகமாம்
எள்ளி நகையாடுவர் குறுமனத் தமிழர்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
பகன்றான் பவணந்தி பகுத்தறிந்து அன்றே
புன்மை இருட்கணம் தொலைவது எந்நாளோ?
இருப்பது அறியான் அடுத்தார் அகம் பார்ப்பான்
இயல்பு இதுவென அறியா மாக்களாய் மடிவான்
இவர்தாம் எம்தமிழர் எனப் புரியா இளையர்
இன்று குருடராய் அறியாதார் பாதம்பற்றி
இயல்பு வாழ்வென உணர்த்துவது எவராமோ?
இயல்பு வாழ்வென உணர்த்துவது எவராமோ?
நானே தமிழென வெளி சிலிர்க்கும் சான்றோர்
தமிழே தாம் தாம் எனக் கர்ஜிக்கும் நரிகளாய்
என்ன கொடுமையடா இவர்தம் கூற்று
தமிழை வாழ்விக்கத் தலைப்பட வேண்டா
தமிழே இதுவென என்று தலைப்படத் துணிவரோ ?
பாமரன் வாழ்வியலைக் கற்றுத் தந்தான்
ஊரான் உண்மைகள் எல்லாம் தமதென்றான்
அன்னையை அடையாளம் தெரியாதார்
கண்டவன் சொல்லே ஞானமந்திரமென்றார்நனிஞானம் பயிலத் தமிழின்றி எது கதியாம்?
நெஞ்சு பொறுக்குதிலையே இன்றும் என்றும்
உம் சிந்தனை குறை மடமைகளைக் காணின்
வெந்து வீணராய் மாயுமுன்னே இப்பாரும்
முந்தித் தமிழிதுவென அறிவதே வாழ்வென
முந்திச் செய்யாதாயின் மிஞ்சுமோ இனியுலகம்?
தமிழ் பழகுவோரெல்லாம் தமிழரல்ல
தமிழ் இதுவென அறிவோர்மட்டும் தமிழரே
தமிழ் மொழியல்ல தரணியில் ஒன்றாய்
தமிழே வழியாம் தரணி ஒன்றென வாழ
தலைப்படு தமிழா தரணிவாழ தமிழே கதியாம்
தலைப்படு தமிழா தரணிவாழ தமிழே கதியாம்
No comments:
Post a Comment